பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும். சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
Comments
Post a Comment